பி.டி. என்பது மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிர். இதில் உள்ள புரதம் பருத்திச் செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உடையது என்று கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள், பி.டி. பருத்தி விதைகளை உருவாக்கின.
அதாவது பி.டி. நுண்ணுயிரியின் புரதத்தை எடுத்து பருத்திச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்தி, காய்ப்புழு தாக்காத பருத்தியை உற்பத்தி செய்தன.
பின்னர் மஹிகோ நிறுவனம் மூலம் இந்த பருத்தி ரகம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், பி.டி. பருத்தி விதைகள், விவசாயிகள் எப்போதும் பயிரிடும் பருத்தி ரகங்களைக் காட்டிலும் குறைவான முளைப்புத் திறன் கொண்டிருந்தன.
முளைத்துப் பயிரான பருத்திச் செடிகளின் இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகள் இறந்தன. பருத்திச் செடிகளில் இருந்த காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல், அவை மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்று முன்பைவிட அதிகமாக செடிகளை அழிக்கத் தொடங்கின.
உடனே மான்சான்டோ நிறுவனம் தனது தயாரிப்பான பூச்சிகொல்லி மருந்துகளை அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் இதனையும் அதிக விலை கொடுத்து வாங்கி, பருத்தி வயல்களில் பயன்படுத்தினர். ஆனால், காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு நஷ்டஈடும் பெற முடியவில்லை.
நமது விவசாயத்தின் தற்சார்பை அழிக்கும் மான்சான்டோ நிறுவனத்தின் பி.டி. பருத்திக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் இப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் பி.டி. பருத்திக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி மூலம், மரபு சார்ந்த வகை பருத்தியை அறிமுகம் செய்யப்போவதாக விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமும் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையும் தெரிவித்துள்ளன.
மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்று என்ற பெயரால் மீண்டும் மான்சான்டோவின் மரபீனி பருத்தி விதைகளையே வேறொரு வடிவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது.
எனவே, மரபணு மாற்றப்பட்ட பருத்தியை எந்த வடிவத்திலும் பயிரிட அனுமதிக்கக்கூடாது.
நமது பாரம்பரிய பருத்தி ரகங்களைப் பாதுகாத்து, வேளாண் துறையில் தற்சார்பை காக்க வலியுறுத்துவோம்.