Asianet News TamilAsianet News Tamil

பருவ மழையால் ஏற்படும் பேரிடர்களை உடனே தெரிவிக்க வேண்டும் – அனைத்துதுறை அலுவர்களுக்கும் ஆட்சியர் உத்தரவு…

Announcements of monsoon rains should be reported immediately - Collector orders all officers
Announcements of monsoon rains should be reported immediately - Collector orders all officers
Author
First Published Nov 10, 2017, 6:26 AM IST


ஈரோடு

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக விவரங்களை நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தவறாமல் தகவல் தெரிவிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கப் பருவ மழையினை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்துத் துறை அலுவலர்கள்கொண்டு உடனே கூட்டம் நடத்திட வேண்டும்.

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரவாரியம், வளர்ச்சித் துறை அலுவலர்கள் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பேரிடர்களை உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார்பு துறைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இரவில் சுழற்சி முறையில் பணிபுரிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் கடந்த ஆண்டுகளில் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னேற்பாட்டு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அப்பகுதிகளில் மக்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், நுகர்வோர் பாதுகாப்பு குழு, சமுதாய நல அமைப்புகள் மற்றும் பிற பொதுநல அமைப்புகள் குறித்த விவரங்களை தங்கள் அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் மற்றும் வட்டத்தில் பொக்லைன், புல்டோசர், கனரக வாகனங்கள் மற்றும் தேவையான மீட்பு பணி உபகரணங்களை வைத்துள்ளவர்களின் பட்டியலை தொலைபேசி எண்ணுடன் தாசில்தார்கள் தொகுத்து வைத்து கொள்ள வேண்டும்.

தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை, வெள்ளம், புயலினால் ஏற்படும் பேரிடரிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான உபகரணங்கள் போதுமான இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மின்சார வாரிய அலுவலர்கள் மழையினால் மின் இணைப்பு பாதிக்கப்படும் இடங்களில் உடனுக்குடன் சென்று தேவையான நடவடிக்கைகள் எடுக்க குழுக்களை அமைக்க வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் ஆறுகள் மற்றும் குளங்களின் கரைகள் நல்ல நிலையில் உள்ளதா? என்று சோதனை செய்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கரைகள் பாதிக்கப்பட்டால் சீர் செய்ய தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், குடிமைப்பொருள் வழங்கல் துறையினர், சுகாதாரத்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தங்களது பொறுப்புகளை உணர்ந்து இயற்கை இன்னல்களை எதிர்கொள்ள அனைத்து வட்டத்திலும் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் பாலுசாமி உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios