
விமான நிறுவன ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்படும் பயணி, உள்நாட்டில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பறக்க தடை விதிக்கும் புதிய விதிமுறைகளை மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் சிவசேனா கட்சியின் எம்.பி. கெய்க்வாட், ஏர் இந்தியா விமானத்தின் மேலாளரை செருப்பால் அடித்தது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அந்த எம்.பி.க்கு அனைத்து விமானத்திலும் பறக்கத் திடீர் தடை விதிக்கப்பட்டது. கெய்க்வாட் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்த தடை விலக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றை காக்கவும், சகபயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும், ரகளை செய்யும் பயணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு விமானத்தில் பறக்கத் தடைவிதிக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவற்றில் இந்த முறை அமலில் இருக்கிறது என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
இதையடுத்து. விமானத்தில் ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபடுதல், பிரச்சினையில் ஈடுபடுதல், சத்தம் போடுதல், தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு எந்த விதமான தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறித்த வரைவு விதிமுறைகளை விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் செயலாளர் சவுபே இன்று வெளியிட்டார்.
ஏறக்குறைய ஒருமாதம் வரை விமானப்போக்குவரத்து துறை அமைசச்கத்தின் இணைதளத்தில் இருக்கும் இந்த விதிமுறைகள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை கூறி அதில் பதிவிடலாம்.
இது குறித்து விமானப்போக்குவரத்துறை செயலாளர் சவுபே கூறுகையில், “ விமானத்தில் ரகளை செய்யும் பயணிகளை 3 பிரிவாகப் பிரித்து தண்டனை வழக்க இருக்கிறோம். அதன்படி, முதலாவதாக விமானப் பணியாளர்கள், ஊழியர்களிடம் தவறான செய்கைகள் மூலம் அவதூறாக நடந்து கொள்ளும் பயணிகள் உள்நாட்டு விமானத்தில் 3 மாதம் பறக்கத் தடை விதிக்கப்டும்.
இரண்டாவதாக, விமானஊழியர்களிடம் உடல்ரீதியாக தவறாக நடந்து கொள்ளுதல், இடித்தல், கிள்ளுதல், தள்ளுதல், முத்தமிடுதல், பாலியல்ரீதியாக சீண்டுதல் போன்றசெயலில் ஈடுபடும் பயணிகள் அடுத்த 6 மாதங்களுக்கு எந்த விமானத்திலும் பயணிக்க முடியாது.
3-வதாக ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசுதல், செயல்படுதல், தாக்குதல் போன்றவற்றில் எந்த பயணி ஈடுபட்டாலும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் விமானத்தில் பயணிக்க தடைவிதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள ஏற்றுக்கொள்ளமுடியாத, நியாமில்லாத நடத்தை என்றால் என்ன, அதன் வரையரை என்ன, இந்த குற்றத்தின் அளவை யார் தீர்மானிப்பார் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை.