
மும்பை மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த எகிப்து குண்டு பெண், 83 நாட்களில் 500 கிலோவில் இருந்து 170 ஆக குறைத்தநிலையில், இன்று அபுதாபி புறப்படுகிறார்.
மும்பையில் இருந்து விமான நிலையம் செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் மற்றும் இடையூறு இன்றி செல்லவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகின் மிகவும் குண்டான பெண்ணான 36 வயதான இமான் அகமது, எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். இவரின் உடல் எடை 500 கிலோ ஆகும். உடலின் அதிகமான எடையால், ஒரு ஆண்டு படுக்கையிலே காலத்தை கழித்தார், இதையடுத்து, உடல் எடையைக் குறைப்பதற்காக மும்பையில் உள்ள சைபி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
எகிப்தில் இருந்து வரும் போது, தனி சரக்கு விமானத்தில், பிரத்யேக ஆம்புலென்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின், ராட்சத கிரேன் மூலம், பிரத்யேக படுக்கையில் தூக்கப்பட்டு இமான் அகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
கடந்த 83 நாட்களில் மும்பை மருத்துவர்கள் பல கட்ட நவீன அறுவை சிகிச்சைகள் செய்ததன் மூலம் இமான் அகமதுவின் உடல் எடை படிப்படையாக குறையத் தொடங்கியது. ஆனால், இமான் அகமதுவின் சகோதரி, தனது சகோதரியின் உடல் எடை குறையவில்லை, மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று புகார் அளித்தார். ஆனால், 500 கிலோ எடைகொண்ட இமான் அகமது 83நாட்களில் 330 கிலே எடையைக் குறைத்து, 170 கிலோவாக மாறியுள்ளார்.
83 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, மும்பை மருத்துவமனையில் இருந்து வெளியேறி, அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இமான் அகமதுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முபாசல் லக்டாவாலா கூறுகையில், “ இமான் என்னை விட்டு பிரிகிறார், நானும் அவரை விட்டு பிரிகிறேன். இமான் எங்களை விட்டுச் செல்லும் முன், இன்றுகாலை எனது கைகளைப்பற்றிக் கொண்டார். அவர் எங்களை விட்டு செல்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.
இமான் அகமது தொடர்பான மருத்துவ ஆவணங்கள் அனைத்தும், விரைவில் புர்ஜீல் மருத்துவமனை நிர்வாகத்திடம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.