
உலகில் எந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, “வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்” அறிக்கையை ஐக்கிய நாடுகள் வெளியிட்டு வருகிறது. சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த அறிக்கையை ஐக்கியநாடுகள் சபை வெளியிட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் வாழ்க்கை தரம், வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல் சூழல், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட வாழ்க்கை,சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வு செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த நார்வே நாடு 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. டென்மார்க் நாடு 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் நாடுகள் உள்ளன.
வல்லரசு நாடான அமெரிக்கா ஒரு இடம் சரிந்து 14-வது இடத்திலும், ஜெர்மனி 16-வது இடத்திலும், இங்கிலாந்து, 4 இடங்கள் முன்னேறி,19-வது இடத்திலும் உள்ளன. 7 இடங்கள் முன்னேறி ரஷியா 49-வது இடத்திலும், ஜப்பான் 51-வது இடத்திலும், சீனா 79-வது இடத்திலும் உள்ளன.
கடைசி 5 இடங்களில், மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி நாடுகள் உள்ளன. இதில் இந்தியா கடந்த முறை 118-வது இடத்தில் இருந்து சரிந்து 122-வது இடத்துக்கு பின்தங்கி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 80-வது இடத்தையும், நேபாளம் 99-வது இடத்தையும், இலங்கை 110-வது இடத்தையும் பெற்றுள்ளன.