99 வயதில் கொரோனாவிடம் போராடி வென்றதை சிறப்பிக்கும் விதமாக எர்மாண்டோ ராணுவ மரியாதையுடன் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், எர்மாண்டோ மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளதாகவும் இம்முறை கொரோனாவுடன் போராடி வெற்றி கண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் அமெரிக்கா, இத்தாலி, ,ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி 21,82,197 மக்களை தாக்கி இருக்கிறது. கொரோனாவினால் இதுவரை 1,45,521 மக்கள் தங்கள் உயிர்களை இழந்து இருக்கின்றனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 30,683 பேர் பாதிக்கப்பட்டு 1,947 பலியாகி உள்ளனர். இதனிடையே ஒட்டுமொத்த உலகிற்கும் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக 99 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிரேசிலில் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்றுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எர்மாண்டோ பிவிட்டோ. 99 வயதான இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். ராணுவத்தில் பல்வேறு வீரதீர செயல்களை புரிந்திருக்கும் எர்மாண்டோ இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் ஆப்பிரிக்காவில் பிரேசில் ராணுவப் படையில் பணியாற்றினார். தனது ராணுவ பணி காலத்துக்குப் பிறகு பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவில் வசித்து வந்த எர்மாண்டோவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து 8 நாட்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட அவர் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். 99 வயதில் கொரோனாவிடம் போராடி வென்றதை சிறப்பிக்கும் விதமாக எர்மாண்டோ மருத்துவமனையில் ராணுவ மரியாதையுடன் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், எர்மாண்டோ மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளதாகவும் இம்முறை கொரோனாவுடன் போராடி வெற்றி கண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.