இரு நாடுகளுக்கும் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எந்த தடையுமின்றி கிடைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . இருநாட்டின் தேவைகளை வாசிங்டன் கண்காணித்து வருகிறது என பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார் , இரு நாடுகளுக்கும் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது, உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் அகோரத் தாண்டவம் ஆடி வருகிறது .
அமெரிக்காவில் 6 லட்சத்து 78 ஆயிரத்து 710 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில் அமெரிக்கா இந்த வைரஸில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன . பிரத்தியேக தடுப்பூசி எதுவும் இல்லாததால் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிக் குளோரோகுயின் என்ற மாத்திரையை கொண்டு கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம், அது நல்ல பலனை கொடுக்கும் என அமெரிக்கா பரிந்துரைத்தது . இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் அந்த மாத்திரை கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 40 கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைத்து இந்தியா உதவியது .
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ , கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளார் . தொலைபேசி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் . இந்தியா அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் , இந்தோ பசிபிக்கில் சுதந்திரமான வர்த்தகம் , சீனாவின் சவால் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . இரு நாடுகளுக்கும் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எந்த தடையுமின்றி கிடைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . நாட்டின் தேவைகளை வாசிங்டன் கண்காணித்து வருகிறது என பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் அவசர தேவை அறிந்து இந்தியா ஹைட்ராக்ஸிக் குளோரோகுயின் மீதான தடையை நீக்கி அமெரிக்காவுக்கு தேவையான மாத்திரைகளை அனுப்பி வைத்துள்ளது . அதேபோல் இந்தியாவில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவியாக அமெரிக்கா கிட்டத்தட்ட 5.9 மில்லியன் டாலர் பணத்தை சுகாதார உதவியாக வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எத்தனையே நாடுகள் அமெரிக்காவிடம் நெருக்கம் காட்டி வரும் நிலையில் கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்திருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிடம் அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளதால் அமெரிக்கா இவ்வாறு பேசிவருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.