தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ள கருத்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்றும், மற்ற முயற்சிகளால் பெரிய பலன் கிடைக்காது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரோஸ் தெரிவித்துள்ளார் , கொரோனாவை எதிர்கொண்டு வரும் உலக நாடுகள் அத்தனையும் ஊரடங்கு கடைபிடித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . உலக அளவில் இந்த வைரஸால் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் உயிரிழந்துள்ளனர் , கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின், பிரான்ஸ் , ஜெர்மனி , பிரிட்டன் , ஈரான் , துருக்கி , உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடுகிறது .
அங்கு மட்டும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் , இந்நிலையில் உலக வல்லரனசான அமெரிக்கா , இந்த வைரஸில் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது . ஒருபுறம் உலக நாடுகள் பெரும் மனிதப் பேரிழப்பை சந்தித்து வரும் நிலையில் , பல நாடுகளின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உலக அளவில் கோடிக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பல நாடுகள் தலை தூக்கவே முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மெல்ல ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை இயக்க பல நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் உலகச் சுகாதார நிறுவனம் ஊரடங்கு தளர்வு விவகாரத்தில் உலகநாடுகள் அவசரப் படக்கூடாது என எச்சரித்துள்ளது.
ஆனால் இதுகுறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோணி குத்ரோஸ் , ஒரு பிரத்தியேக தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும், ஒரு தடுப்பூசியால் மட்டுமே உலக இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும் எனக் கூறியுள்ளார் .ஐக்கிய நாடு சபையில் இடம்பெற்றுள்ள 47 க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது , பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலக இயல்பு நிலைக்கு கொண்டு வரும், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்புசி கண்டுபிடிக்கப்படும், தடுப்பூசி மட்டுமே கோடிக்கணக்கான உயிர்களையும் எண்ணற்ற ட்ரில்லியன் டாலர் களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கும் .
2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதுபோன்ற தடுப்பூசியை உலகளாவியரீதியில் பயன்படுத்துவதற்கு தேவையான வேகத்தையும் அளவையும் அதிகரிக்க சர்வதேச நாடுகள் இணக்கமான ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்ய நாம் அனைவரும் முயல வேண்டும். கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 25ஆம் தேதி 2 பில்லியன் டாலர் நன்கொடை தேவை என அழைப்பு விடுத்தது , அதில் தற்போது வரை 20% திரட்டப்பட்டுள்ளது . உலக சுகாதார அமைப்பு மூலம் 47 ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா சோதனைக்கு தயார்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் முடிந்தது என்றார் . அதே நேரத்தில் நோய் தொற்று பரவுவதை தடுக்க ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சியையும் அந்தோணி குத்ரோஸ் பாராட்டியுள்ளார் . தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ள கருத்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.