600 கிலோ எடை.. 400 கிலோவை குறைச்சு சாதிச்ச மனுஷன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே!

Published : Jan 02, 2026, 02:57 PM IST
Juan Pedro Franco World's Heaviest Man Dies

சுருக்கம்

கின்னஸ் சாதனை படைத்த உலகின் அதிக எடை கொண்ட மனிதரான ஜுவான் பருத்தி ஃபிராங்கோ, 41 வயதில் காலமானார். கடுமையான எடை குறைப்பு முயற்சிகளுக்குப் பிறகு சுமார் 400 கிலோ எடையைக் குறைத்து மீண்டு வந்த அவர், சிறுநீரகத் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதராக இடம்பெற்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பருத்தி ஃபிராங்கோ (Juan Pedro Franco), தனது 41-வது வயதில் உயிரிழந்தார். சிறுநீரகத் தொற்று காரணமாக ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களால் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டில் ஜுவான் பருத்தி ஃபிராங்கோ கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அப்போது அவரது எடை 594.8 கிலோவாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது அதிகபட்ச எடை 606 கிலோவை எட்டியது.

அதிகப்படியான உடல் பருமன் காரணமாக படுக்கையை விட்டு நகர முடியாமல் தவித்த அவர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு குறைபாடு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மீண்டு வந்த சாதனையாளர்

தனது உடல்நிலையை மேம்படுத்த ஃபிராங்கோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். கடுமையான உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினார். 'ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டோமி' மற்றும் 'கேஸ்ட்ரிக் பைபாஸ்' ஆகிய இரண்டு முக்கிய உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டார்.

இந்த விடாமுயற்சியின் பலனாக, 2020-ஆம் ஆண்டிற்குள் அவர் சுமார் 400 கிலோ எடையைக் குறைத்து, 200–210 கிலோ அளவிற்குத் தனது எடையைக் கொண்டு வந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவராகவே எழுந்து நடக்கும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதே ஆண்டில் அவர் கோவிட்-19 பாதிப்பிலிருந்து 22 நாட்களில் மீண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஃபிராங்கோவின் உருக்கம்

தனது கடந்த கால வாழ்க்கை குறித்துப் பேசிய ஃபிராங்கோ, "எனது உடல் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பெருகிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். ஆனால் அதற்குப் பலன் கிடைக்காமல் விரக்தியில் இருந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தினமும் காலையில் நானாகவே எழுந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, கழிவறைக்குச் செல்வதே எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று ஒரு பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

மருத்துவர்கள் கருந்து

சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று (Kidney Infection) தீவிரமடைந்தது. இது மற்ற உறுப்புகளையும் பாதித்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மருத்துவர் ஜோஸ் அன்டோனியோ காஸ்டனெடா கூறுகையில், "உடல் பருமன் என்பது நீண்டகால கவனிப்பு தேவைப்படும் நோய் என்பதை ஃபிராங்கோ உலகிற்கு உணர்த்தினார். தீவிர உடல் பருமனுக்கு எதிராகப் போராடிய அவர், பலருக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்ந்தார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!