பெண்கள் நடத்திய தற்கொலை தாக்குதல் - 28 பேர் உடல் சிதறி பலி!!

First Published Aug 17, 2017, 10:15 AM IST
Highlights
women suicide squad killed 28 in nigeria


2002–ம் ஆண்டு நைஜீரியா நாட்டில் முதல் போகோஹரம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒரே நோக்கம், அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தை அமைப்பதுதான். 

இதற்காக அந்த அமைப்பினர் 2009–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிற ஆயுதப்போராட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக  ஆக்கப்பட்டுள்ளனர்.

அந்த அமைப்பில் ஆண்களுடன், பெண்களும் சேர்ந்து ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சியாளர்கள், ‘‘ஆண்களை விட அதிகளவில் பெண்களைப் பயன்படுத்துகிற முதல் கிளர்ச்சிக்குழுவாக போகோஹரம் குழு திகழ்கிறது’’ என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் மைதுகுரி நகரில், போகோஹரம் பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மந்தாரரி என்ற இடம் உள்ளது. அங்கு ஒரு அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.
அந்த அகதிகள் முகாமுக்கு வெளியே நேற்று முன்தினம் போகோஹரம் அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பெண் பயங்கரவாதிகள் 3 பேர் தாக்குதல் நடத்தினர்.

முதலில் ஒரு பெண், தன் உடலில் கட்டி எடுத்து வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தபோது அவர் உடல் சிதறி பலி ஆனார்.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் இருந்த கடைகளை வியாபாரிகள் அவசர அவசரமாக மூடத்தொடங்கினார்கள்.

ஆனால் அதற்குள்ளாக மேலும் 2 பெண்கள், தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது. பதற்றம் அடைந்த மக்கள் நாலாபுறமும் ஓடத்தொடங்கினர். இருப்பினும் இந்த தற்கொலை தாக்குதலில் சிக்கி 28 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 82 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து அந்தப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

click me!