பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட்டை இந்தியாவை விட மிகக் குறைவு, பாகிஸ்தானின் ராணுவம் உயர்ந்த பட்ஜெட்டை கொண்டுள்ளது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, உண்மை என்னவோ அதற்கு நேர்மாறாக உள்ளது.
ரஃபேலாக இருந்தாலும் அது எஸ்-400 ஆக இருந்தாலும் இந்தியாவை சமாளிக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்தியாவை விட பத்து ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தை காரணமாக வைத்து எல்லையில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. அதேபோல் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இப்படி எதிரி நாடுகளால் எல்லைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், அந்நாடுகளை சமாளிக்க இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தும் நோக்கில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் தீவிரம்காட்டி வருகிறது.
இந்நிலையில் சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான ரஃபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. சுமார் 30 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் தொகுதியாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது. இதனால் பாகிஸ்தான்,சீனா ஆகிய நாடுகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளன. ஏனெனில் இந்திய எல்லையில் இருந்தபடியே பல்லாயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருந்தும் எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஆற்றல் ரஃபேலுக்கு உண்டு. அதுமட்டுமின்றி எதிரிநாட்டு ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அவர்களின் எல்லைக்குள் ஊடுருவ ஆற்றல் ரஃபேலுக்கு உள்ளதால் அதிசக்திவாய்ந்த போர் விமானமாக இது கருதப்படுகிறது. இதுவரை சீனா, பாகிஸ்தானிடம் ரஃபேல் போர் விமானங்கள் இல்லை. சாதாரணமாக நான்கு போர் விமானங்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு ரஃபேல் விமானம் செய்து முடிக்கும் என்பதால், இந்திய விமானப்படையின் பலம் முன்பைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறையே இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது. இதற்காக ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறை இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எதிரி நாட்டு விமானங்களையும், ஏவுகணைகளையும், தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் எஸ்-400க்கு இருப்பதால் அது யுத்தகாலத்தில் ராணுவத்திற்கு மிகப்பெரும் வலிமையாக அமையும், இப்படி இந்தியா ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட நாடுகள் உண்மையிலேயே கதிகலங்கி நிற்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவான இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்தியார், கூறுகையில்,, இந்தியா தனது பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை அதிகரிப்பதன் மூலம் பிராந்தியத்தின் நிலைமையை அச்சுறுத்தும் சூழல் உருவாகி இருப்பதாக கூறினார்.
இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை அதிகரித்து வருகிறது, இதனால் தெற்காசியாவில் அதிகாரச் சமநிலை மோசமாகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் பத்து ஆண்டுகள் பின்தங்கி உள்ளன. பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட்டை இந்தியாவை விட மிகக் குறைவு, பாகிஸ்தானின் ராணுவம் உயர்ந்த பட்ஜெட்டை கொண்டுள்ளது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, உண்மை என்னவோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இந்தியா ராணுவத்திற்காக அதிக செலவு செய்கிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் ஆயுதப் போட்டி தொடங்கியுள்ளது. புள்ளி விவரங்களை பார்த்தால் பாதுகாப்புக்காக அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நீங்கள் காண்பீர்கள். இருப்பினும் இந்தியாவின் ரஃபேல் விமானமாக இருந்தாலும் அல்லது எஸ்-400 ஆக இருந்தாலும் இந்தியாவை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.