பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட கோழிகளின் மாதிரியை சேகரித்து அதை ஆய்வு செய்தனர்.
பிரேசிலில் இருந்து வந்த கோழிகளில் கொரோனா வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரேசில், ஈகுவடார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால், மீன் இறைச்சி போன்றவற்றை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் வூபே மாகாணத்தில் 68 வயதான பெண்ணுக்கு முதன் முதலில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இதனை அடுத்து வுபே மகாணத்தில் பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 215 க்கும் அதிகமான நாடுகளில் தனது கொடூர கரத்தை பரப்பியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது இதுவரை 2.83 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 லட்சத்து 47 ஆயிரத்து 865 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அந்நாட்டில் 53 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1.69 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. தடுப்பூசி வந்தால் மட்டுமே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்புசி எதிர்நோக்கி காத்திருக்கிறது .
அதற்கான ஆராய்ச்சியில் உலக அளவில் சுமார் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அதேபோல் மறுபுறம் வைரஸ் தொற்று எவ்வாறு பரவுகிறது, அதன் தன்மை என்ன என்பது போன்ற ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. அதில் சீனா, ரஷ்யா இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்த நாடுகளையும் உறைய வைக்கும் வகையில் சீன அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது உலக அளவில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளையே சார்ந்துள்ள நாடாக சீனா இருந்து வரும் நிலையில், பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட கோழி சிறகுகளில் கொரோனா வைரஸ் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் யந்தாய் நகரில் உள்ள சந்தைக்கு பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட கோழிகள் மற்றும் ஈக்வடாரில் இருந்து வந்த இறால் மீன்களிலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரேசில் , ஈக்வடாரில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதியை சீனா நிறுத்தியுள்ளது. அதாவது சீனாவின் ஷென்செனில் உள்ள உள்ளூர் நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் (சிடிசி) வழக்கமான சோதனையில் ஈடுபட்ட நிலையில் பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட கோழிகளின் மாதிரியை சேகரித்து அதை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொரோனா வைரஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொற்று கண்டறியப்பட்ட கோழிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான தொற்றும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இதுகுறித்து பிரேசில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஷென்சென் நகரிலுள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் வெளிநாடுகளில் இருந்து வரும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக ஜூன் மாதத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஜூம் பாடி கடலுணவு சந்தையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்போதிலிருந்தே அரசாங்கம் அனைத்து உணவுப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து அதில் கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்து வருகிறது. அதனடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில் கோழியில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.