ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைபற்றி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைபற்றி உள்ளனர்.
ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் விலகிச்சென்ற பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்று இந்தமுறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும் என உலக நாடுகள் கவலையில் உள்ளன.
இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித், ‘’தலிபான்கள் ஆட்சியில் சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஏனென்றால், தலிபான்கள் முஸ்லி்ம்கள். ஆனால், கடந்த முறையைவிட இந்த முறையில் தலிபான்களுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்துள்ளன. அந்த அனுபவத்தால் அவர்கள் கண்ணோட்டம் மாறும். பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாமிய சட்டப்படி வழங்க தலிபான்கள் கடமைப்பட்டுள்ளனர். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.
உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மற்றநாடுகளை தாக்குவதற்கு பயன்படும் தளமாக இனிமேல் யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். அமெரிக்கப் படைகளும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த படைகளும் வந்தபோது, அவர்களுக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு முழுமையான பொதுமன்னிப்பு வழங்குகிறோம்’’எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுப்போம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். கஜினி மற்றும் ஜலாலாபாத்தில் வசிக்கும் 320-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் (50 இந்துக்கள் மற்றும் 270-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் உட்பட) காபூலில் உள்ள கார்தே பர்வான் குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளனர். தலிபான் தலைவர்கள் அவர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று தலிபான் தலைவர்கள் உறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.