இம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 11:33 PM IST
Highlights

தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிதியுதவி, பொருளுதவி ஆகியவற்றை தடுக்கும் வகையில் வேகமாகச் செயல்படாவிட்டால் அடுத்த 4 மாதங்களில் பாகிஸ்தானை கறுப்புப்பட்டியலில் சேர்த்துவிடுவோம் என்று தீவிரவாதிகளுக்கான நிதித்தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பு எச்சரித்துள்ளது

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க 1989ம் ஆண்டு ஜி7 நாடுகளால் நிதி செயல் நடவடிக்கைக் குழு (எப்ஏடிஎப்) உருவாக்கப்பட்டது

பிரான்ஸின் பாரீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் குழு, தீவிரவாதிகளுக்கு உதவிசெய்தல், நிதியுதவி அளித்தல், ஆயுத உதவி அளித்தல், ஆதரித்தல் போன்ற விதிமுறைகளை மீறும் செயல் நாடுகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து வருகிறது. கறுப்புப்ப பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடமிருந்து நிதியுதவி பெறுவது கடினம்.

தீவிரவாதச் செயலுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எப்ஏடிஎப் க்ரே பட்டியலில் சேர்க்கப்பட்டது. இம்மாத இறுதியில் இந்தத் தடைக் காலம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், எப்ஏடிஎப் மறு ஆய்வுக் கூட்டம் கடந்த இரு நாட்களாக பாரீஸில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத நிதியுதவியைத் தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எப்ஏடிஎப் அமைப்பிலிருந்து வரும் தகவல்கள் கூறுகையில், " தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, பண உதவியைத் தடுத்தல், தீவிரவாத முகாம்களை அழித்தல், கைது செய்தல் போன்றவற்றை அடுத்த 4 மாதங்களுக்குள் அதாவது 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பாகிஸ்தான் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ்இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும்.

எப்ஏடிஎப் அமைப்பு நிர்ணயித்த 27 விதிமுறைகளில் 5 விதிமுறைகளை மட்டுமே பாகிஸ்தான் கடைப்பிடித்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து தீவிரவாத அமைப்புகளையும், தீவிரவாதிகளையும் ஒழிக்கும், ஒடுக்கும் செயலில் இறங்காவிட்டால் அடுத்தகட்டமாகப் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆனால், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு மலேசியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சம்மதிக்கவில்லை. ஒரு நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு 3 நாடுகள் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு இருந்ததால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல்  கடும் எச்சரிக்கையுடன் க்ரே பட்டியலோடு விடப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் கிரே லிஸ்ட் பட்டியல் நாடுகளில் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், பண உதவி ஆகியவற்றைத் தடுக்க போதுமான அக்கறை காட்டாததால் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கறுப்புப் பட்டியலில் ஈரான், வடகொரிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து க்ரே லிஸ்ட்நாடுகள் வரிசையில் இருந்துவந்தால், அந்த நாட்டுக்கு உலக வங்கி, ஐஎம்எப், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிலிருந்து உதவிகள் கிடைப்பது கடினமாகும்.

click me!