
பல மொழிகளைப் பேசுவது மூளை முதுமை அடைவதைத் தாமதப்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள 27 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 51 முதல் 90 வயது வரை ஆன 80,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வு குறித்த கட்டுரை 'நேச்சர் ஏஜிங்' (Nature Aging) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு மொழி பேசுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதி வேகமாக மூளை முதுமை அடைகிறது. பல மொழிகள் பேசுபவர்களுக்கு வேகமாக மூளை முதுமையடைதல் ஏற்படும் வாய்ப்பு பாதியளவே உள்ளது.
பேசும் மொழிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மூளையின் ஆரோக்கியமும் அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் (University of Auckland) டிமென்ஷியா (Dementia) ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளருமான டாக்டர் எடு மா'உ (Dr Etu Ma'u), இந்த ஆய்வு முடிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறுகிறார். இது காலப்போக்கில் அறிவாற்றல் ஆரோக்கியத்தை (cognitive health) பராமரிக்க உதவுகிறது எனவும் தெரிவிக்கிறார்.
40 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இயற்கையாகவே மூளை சுமார் 5% சுருங்குகிறது. ஆனால், பல மொழிகளைப் பேசுவது மூளையின் முதுமையைத் தாண்டி செயல்படும் திறனை வலுப்படுத்த உதவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவது மூளை முதுமையடைவதைக் குறைக்கிறது என்றும், கூடுதல் மொழிகள் ஒவ்வொன்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல மொழிகளைப் பேசுபவர்களின் மூளை, அவர்களின் உண்மையான வயதைவிடப் பல ஆண்டுகள் இளமையாகத் தெரிவதாகவும், ஒரே ஒரு மொழி பேசுபவர்களுக்கு மூளை அதிக முதுமை அடைவதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது.
டிமென்ஷியா என்பது காலப்போக்கில் குவியும் சேதத்தால் ஏற்படுகிறது என்று வலியுறுத்திய டாக்டர் மா'உ, ஆரம்பக்கால நடவடிக்கை அவசியம் என்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே மொழி கற்றலை ஊக்குவிப்பது, வாழ்நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.