
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற குடியேற்றக் கொள்கை எதிர்ப்பு போராட்டம் திடீரென வன்முறையில் முடிந்தது.
அந்த நகரின் முக்கிய கடைகளில் ஒன்றான ஆப்பிள் ஸ்டோர் உட்பட பல வணிக வளாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த குழுக்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, மொபைல்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை தாராளமாக பறித்துச் சென்றனர்.
வணிக வளாகங்களில் நடந்த அட்டூழியங்களில் ஆப்பிள் கடை முக்கியமாக குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகள் சட்ட மீறலாகவும், குடியேற்றத்தின் பெயரில் நடத்தப்பட்ட துஷ்பிரயோகமாகவும் விமர்சிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் அந்தக் கொள்ளை சம்பவங்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
நகரில் நிலவிய பதற்றநிலையை கட்டுப்படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பொது மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக தங்கியிருந்த குடியேறிகளின் குடியிருப்புகளில் குடியேற்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் வலுத்தன. சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், ஆஸ்டின் உள்ளிட்ட நகரங்களிலும் மக்கள் வீதிகளில் இறங்கினர்.
வன்முறைகள் பரவி வருவதால், அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு படையினரும் கடற்படையினரும் மொத்தம் 700 பேரை கட்சி அலுவலகங்கள், குடியேற்ற முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.