மோடி மிகப்பெரிய மனிதர்.. மிரட்டிய அதே வாயால் மோடியை தாறுமாறா புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

By karthikeyan VFirst Published Apr 8, 2020, 9:10 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளுக்கான உயிர்காக்கும் மருந்தான ஹைட்ராக்ஸி க்ளோரோகுயினை, ஏற்றுமதி செய்யும் தடையை மனிதாபிமான அடிப்படையில் நீக்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு அந்த மருந்தை கொடுத்த இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. மற்ற நாடுகளையெல்லாம் விட அமெரிக்காவில் தான் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா. அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பேரழிவை சந்தித்துவரும் அமெரிக்கா, கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதும் நம்பும் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடமிருந்து பெற தீர்மானித்து ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக ஹைட்ராக்ஸி க்ளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்ததையடுத்து, உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டு அந்த மாத்திரையை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடைவிதித்தது. 

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கில் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரையை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு தராவிட்டால், எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மிரட்டும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரைகளை, அது தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடன்பட்டது. இதையடுத்து அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை பெரிய மனிதர் என்று புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரைகளை எங்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டால், நீங்கள் பெரிய மனிதர் என்று மோடியிடம் பேசும்போது வேண்டுகோள் விடுத்திருந்தேன். இப்போது நமக்கு 2.9 கோடி ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பியுள்ளது. உண்மையிலேயே மோடி பெரிய மனிதர் தான். இந்தியாவிற்கும் அந்த மாத்திரை தேவைப்பட்டதால்தான் அதை ஏற்றுமதி செய்ய இந்தியா தடுத்திருந்தது. பின்னர் கோரிக்கையை ஏற்று வழங்கியுள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏன் அந்த மாத்திரையை வாங்க உலக நாடுகள் இந்தியாவிடம் கையேந்துகின்றன என்றால், உலகளவில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின் மாத்திரையில் 70% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

click me!