
அமெரிக்கா இன்று (புதன்கிழமை) ஆயுதம் பொருத்தப்படாத கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துப் பார்த்துள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் அணு ஆயுதச் சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சோதனை நடந்துள்ளது.
வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து ஆயுதம் இல்லாத மினிட்மேன் III (Minuteman III) ICBM ஏவுகணை சோதனை முறையில் ஏவப்பட்டதாக விமானப்படை குளோபல் ஸ்ட்ரைக் கமாண்ட் (AFGSC) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயுதம் இல்லாத இந்த ராக்கெட், மார்ஷல் தீவுகளில் உள்ள ரொனால்ட் ரீகன் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு சோதனைத் தளத்திற்கு அருகில் தரையிறங்கியது.
GT 254 என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, ICBM அமைப்பின் நம்பகத்தன்மை, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டது.
இந்த சோதனையை, அமெரிக்க கடற்படையின் E-6B மெர்குரி விமானத்தில் இருந்து வான்வழி ஏவுதல் கட்டுப்பாட்டு அமைப்பைப் (Airborne Launch Control System - ALCS) பயன்படுத்தி, AFGSC குழுவினர் நடத்தியுள்ளனர். இது ICBM படையின் செயல்திறனைச் சோதிப்பதாகவும் அமைந்ததாக 576வது விமானச் சோதனைப் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் கேரி ரே கூறினார்.
அமெரிக்கா 33 ஆண்டுகளாக அணு ஆயுதச் சோதனையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அக்டோபர் 30ஆம் தேதி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ரகசிய அணுசக்தி சோதனைகளைச் செய்துவரும் சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் போட்டியாக இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்புக்கு முன்னதாக தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "மற்ற நாடுகளின் சோதனைத் திட்டங்கள் காரணமாக, எங்கள் அணு ஆயுதங்களைச் சோதிக்கத் தொடங்குமாறு நான் போர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த நடவடிக்கை உடனடியாகத் தொடங்கும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவுடன் போட்டியிடும் அணுசக்தி நாடுகளுடன் ஈடுகொடுப்பதை உறுதிசெய்ய அமெரிக்காவுக்கு இந்தச் சோதனை தேவை என டிரம்ப் வலியுறுத்தினார்.
"அணு ஆயுதக் குறைப்பை நான் பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் அது எங்களிடம் மிகவும் அதிகமாக உள்ளது, ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளன. சீனா இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் எங்களுக்கு இணையாக வந்துவிடும்," என்றும் அவர் தெரிவித்தார்.