
மிகப்பெரிய கருந்துளை (Supermassive Black Hole) தனது அருகில் வந்த ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கியபோது, அதிலிருந்து சூரியனைவிட பல மடங்கு அதிக ஆற்றல் கொண்ட ஒளி வீச்சு (Flar) வெளிப்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் பதிவுசெய்துள்ளனர்.
சுமார் 11 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் திரளில் (Galaxy) இருக்கும், சூரியனைப் போல சுமார் 300 மில்லியன் மடங்கு நிறை கொண்ட ஒரு கருந்துளையில் இருந்துதான் இந்த ஒளி வீச்சு வெளியாகி உள்ளது.
இந்த ஒளி வீச்சு அதன் உச்ச நிலையில் இருந்தபோது சூரியனை விட 10 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது பால்வீதி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளையை விட இது மிகவும் பெரியது. நமது பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை சூரியனைப் போல சுமார் 4 மில்லியன் மடங்கு மட்டுமே நிறை கொண்டது.
தவறுதலாக மிக அருகில் வந்த ஒரு ராட்சத நட்சத்திரத்தை இந்தக் கருந்துளை தன் ஈர்ப்பு விசையால் இழுத்து உள்ளிழுத்ததே இந்த ஒளி வீச்சுக்கு மிகவும் சாத்தியமான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதிர்ஷ்டமற்ற அந்த நட்சத்திரத்தின் பாகங்கள் கருந்துளையின் 'மீளமுடியாத புள்ளியை' (Point of No Return) அடையும்போது, அதிலிருந்து அபரிமிதமான ஆற்றல் பீறிட்டு வெளியேறுகிறது.
உள்ளிழுக்கப்பட்ட நட்சத்திரம், சூரியனைப் போல குறைந்தது 30 மடங்கு முதல் 200 மடங்கு வரை நிறை கொண்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
"எவ்வாறு நடந்தது என்றாலும், நட்சத்திரம் பெருநிறை கருந்துளைக்கு அருகில் வந்தபோது, அது கருந்துளையின் தீவிர ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நீளமாகவும் மெல்லியதாகவும் சிதைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு 'ஸ்பாகெட்டிஃபிகேஷன்' (Spaghettification) என்று பெயர்," என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், வானியலாளருமான கே.ஈ. சாவிக் ஃபோர்ட் விளக்கினார்.
இவ்வாறு சிதைக்கப்பட்ட நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயு, கருந்துளைக்குள் விழும்போது சூடேறி ஒளி வீச்சாகப் பிரகாசிக்கிறது.
இவ்வளவு நிறை கொண்ட நட்சத்திரங்கள் பிறப்பது மிகவும் அரிது. ஏனெனில் சிறிய நட்சத்திரங்களே அதிகமாகப் பிறக்கின்றன, மேலும் அதிக நிறை கொண்ட நட்சத்திரங்களின் வாழ்நாள் மிகவும் குறுகியது என்று ஃபோர்ட் கூறினார்.
இந்த ஆய்வுக்குழு கலிபோர்னியா, அரிசோனா மற்றும் ஹவாயில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த ஒளி வீச்சை அவதானித்தது.
ஒளி பயணிக்கும் கால அவகாசம் காரணமாக, 11 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் அவதானிக்கும்போது, அது உண்மையில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைப் பார்க்கிறது.
அவதானிப்பின்போது, இந்த ஒளி வீச்சு 40 மடங்கு அதிகரித்தது. இது ஜூன் 2018 இல் உச்சத்தை அடைந்தது. இது முன்னர் அவதானிக்கப்பட்ட கருந்துளை ஒளி வீச்சுகளை விட 30 மடங்கு பிரகாசமானது.
இந்த நிகழ்வு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் அதன் பிரகாசம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த செயல்முறை முழுவதுமாக முடிய சுமார் 11 ஆண்டுகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.