சீனாவை ஆத்திரமூட்டும் அமெரிக்கா...!! டெக்ஸாஸில் உள்ள தூதரகத்தையும் மூட அதிரடி உத்தரவு..!!

Published : Jul 23, 2020, 01:51 PM IST
சீனாவை ஆத்திரமூட்டும் அமெரிக்கா...!!  டெக்ஸாஸில் உள்ள தூதரகத்தையும் மூட அதிரடி உத்தரவு..!!

சுருக்கம்

சீனாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே ஹூஸ்டனில் உள்ள தூதரகம் மூடப்பட்ட நிலையில், டெக்ஸாஸில் உள்ள சீன தூதரகத்தை மூடவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. 

ஹூஸ்டனில் உள்ள சீனா தூதரகத்தை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குள் மூட வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்னும் பிற சீன தூதரகங்களையும் மூட அந்நாடு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் டெக்ஸாஸில் உள்ள சீன தூதரகத்தையும் மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆத்திரமூட்டல்  நடவடிக்கைகளுக்கு  தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த சில  ஆண்டுகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே  கடுமையான  மோதல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஓருபகுதியாக ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது கடந்த செவ்வாய் கிழமையன்று  ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு சில முக்கியமான ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும், அதை போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், அமெரிக்காவை மிக கடுமையாகவும் எச்சரித்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்  மீண்டும் புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மேலும் ஒரு சீன தூதரகத்தை மூடுவதாக தெரிவித்துள்ளதுடன், அதற்கான உத்தரவையும் சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளாக சீன தூதரகம் அமெரிக்காவில் உளவு பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதுதவிர சட்டவிரோத விஷயங்களில் அது ஈடுபட்டு வருகிறது. 

சீனாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே ஹூஸ்டனில் உள்ள தூதரகம் மூடப்பட்ட நிலையில், டெக்ஸாஸில் உள்ள சீன தூதரகத்தை மூடவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நகலையும்  சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன தூதரகத்தை பொறுத்தவரையில் ஹூஸ்டனில் மூடப்பட்டது போல இன்னும் பிற இடங்களில் உள்ள தூதரகங்களையும் மூட வாய்ப்புள்ளது என கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்டதற்கே தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த சீனா, தற்போது டெக்சாஸ் தூதரகமும் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், அனைத்திற்கும் தகுந்த பதில் அளிப்போம், அமெரிக்கா உடனடியாக தனது உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!