அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன் முதலாக மாஸ்க் அணிந்து பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன் முதலாக மாஸ்க் அணிந்து பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக வந்து 210க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் 3,355,646 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,403 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போது வரை மருத்துவர்களால் ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அமெரிக்க அதிபர் பொதுவெளியில் மாஸ்க் அணிவதே கிடையாது. மாறாக தான் மாஸ்க் அணிய மாட்டேன் என்று டிரம்ப் சொன்னதோடு, மாஸ்க் அணிந்தற்காக தனது போட்டியாளரான ஜோ பிடனை கேலி செய்தார்.
இந்நிலையில், வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு அதிபர் டிரம்ப் சனிக்கிழமை வருகை தந்தார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். மேலும் டிரம்ப் அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது உலக ஊடகங்களுக்கு புதிய படமாக தோன்றியது.