Russia Ukraine War: உக்ரைன் - ரஷ்யா போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அமெரிக்க செய்தியாளர் பிரென்ட் ரெனாட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு நதெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. உக்ரைன் முக்கிய நகரங்களான செர்னிவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்கள் ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டு, தொடர்ந்து ஏவுகணைகளை வீசுவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறபடுகிறது.
மேலும் தற்போதுள்ள சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் ரஷ்ய படைகள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றன. முக்கிய நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றது ரஷ்ய படை. மேலும் உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா வான்வழி தாக்குல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு முன்பிருந்தே வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இரவுகளில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலி கேட்டதாக லிவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1,300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பும் விடுத்துள்ளார்.
இச்சூழலில் ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைன் மத்திய பகுதியில் உக்கிரமடைந்து இருப்பதால், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேலும் உக்ரைன் மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போர் நிலவும் சூழலில், உள்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு, இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. இதற்கிடையே உக்ரைனில் சிக்கியுள்ள குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் அனைவரும் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இர்பின் நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இர்பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் பணியில் இருந்த மற்ற இரு செய்தியாளர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.