
வடகொரியா-அமெரிக்கா இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய அதிபரை படுகொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பு சதி செய்ததாகவும், அந்த ஆசை ஒரு போதும் நிறைவேறாது என்றும் வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ சதித்திட்டம் தீட்டியாதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உயிர் வேதியியல் ஆயுதம் அல்லது ரசாயன ஆயுத உதவியுடன், அமெரிக்காவும், தென்கொரியாவும் இந்த சதிச் செயலை அரங்கேற்ற திட்டம் வகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பியோங்யாங்கில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது கிம் ஜாங் உன்னை கொல்ல முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், இதனை வடகொரியா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் இந்த ஆசை ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்துள்ள வடகொரியா, தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க உளவாளிகளை கண்டுபிடித்து இரக்கமின்றி கொல்வோம் என்றும் கூறியுள்ளது.
வடகொரியா-அமெரிக்கா இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் உள்ள நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த நிகழ்வால் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.