
உக்ரைனில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புதிய திட்டம் அமெரிக்காவால் உக்ரைனுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், உக்ரைன் சில முக்கியமான சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், உக்ரைன் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்க முடியாது என்று நிராகரித்த சில நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று இந்தத் திட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். அதேசமயம், இதற்குப் பதிலாக ரஷ்யா என்னென்ன உறுதிமொழிகளை வழங்கும் என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய திட்டத்தின்படி, உக்ரைன் "கிரிமியா மற்றும் ரஷ்யா கைப்பற்றிய பிற பிராந்தியங்களை" அங்கீகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவம் தற்போது உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதில் 2014-ல் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் 2022-ல் ரஷ்யா இணைத்த டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு பிராந்தியங்களின் சில பகுதிகள் அடங்கும்.
இந்தியாவிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்வைத்ததாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கூறிய நிபந்தனைகளிலும், உக்ரைன் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கிலிருந்து முற்றிலும் படைகளை விலக்க வேண்டும் மற்றும் சபோரிஜியா, கெர்சன் எல்லைகளை முடக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
உக்ரைன் தனது நிலப்பரப்பின் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டை ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறி வரும் நிலையில், நிலத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தூதரக வழிமுறைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று மட்டும் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், உக்ரைன் தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 4,00,000 ஆகக் குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது உக்ரைன் தனது இராணுவத்தை பாதியளவுக்கும் மேலாகக் குறைப்பதாகும்.
மேலும், உக்ரைன் அனைத்து நீண்ட தூர ஏவுகணைகளையும் கைவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள், இந்த ஆண்டு இஸ்தான்புல் பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா முன்வைத்த நிபந்தனைகளான துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், படைகளைத் திரட்டுவதற்குத் தடை விதித்தல் மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்குள் நுழைவதைத் தடுத்தல் ஆகியவற்றுடன் ஒத்துப் போகின்றன.
இதற்கு மாறாக, உக்ரைன் எதிர்காலத்தில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்க, ஐரோப்பிய அமைதிப் படை உட்பட, மேற்கத்திய ஆதரவுடனான உறுதியான பாதுகாப்புக் காப்பீடுகளை விரும்புகிறது.
இந்தத் திட்டம் ரஷ்யாவுடன் இரகசிய ஆலோசனைகள் மூலம் டிரம்ப் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகமான ஆக்ஸியோஸ் (Axios) தெரிவித்துள்ளது. திட்டத்தின் பல அம்சங்கள், சண்டை எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யா கூறியதோ அதையே எதிரொலிக்கின்றன.
"இந்தத் திட்டத்தை ரஷ்யர்கள் அமெரிக்கர்களிடம் முன்மொழிந்திருக்கலாம், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம்" என்று தகவல் அறிந்த மூத்த அதிகாரி கூறுகிறார். இது டிரம்பின் திட்டமா அல்லது அவரது நெருங்கிய சகாக்களின் திட்டமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.