ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. ஹவுதி நடவடிக்கைகள் வர்த்தகத்தை பாதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த தாக்குதல்களில் ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து நடைபெற்றன. சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையாகக் கருதப்படும் சாதாவையும் குறிவைத்தது அமெரிக்கா தாக்கியுள்ளது.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹவுதிகளின் அரசியல் பணியகம் அமெரிக்கா பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அச்சுறுத்தியுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோனை குறிவைத்துத் தாக்குதல் நடைபெற்றதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இரண்டு அமெரிக்க அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை:
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி நிறுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார். ஏமனில் மனிதாபிமான நிலைமைக்கு கடுமையான ஆபத்துகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் சனிக்கிழமை ஹவுதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். ஹவுதிகள் அமெரிக்கர்களைக் குறிவைத்து வன்முறை, கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
சூயஸ் கால்வாய், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா போன்ற கப்பல் போக்குவரத்து பாதைகளில் இடையூறுகள் செய்யும் ஹவுதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய பதிலடி கொடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹவுதிகளின் நடவடிக்கைகள் வர்த்தகத்தை எதிர்மறையாக பாதித்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். அமெரிக்க கப்பல்கள் மீதான ஹவுதி தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாகவும் டிரம்ப் வலியுறுத்தினார்.