ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட மற்ற நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டு நாரா நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஷின்சோ அபே படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பானில் இதுபோன்ற சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது என அந்த நாட்டின் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசியல் ரீதியாக அபே பழிவாங்கப்பட்டாரா போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 67 வயதாகும் அபே ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். நாடுகளிடையே நல்ல நப்புறவை பேணிக் காத்து வந்தார். ஜப்பான் நாட்டில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு கடுமையான விதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் மீறி துப்பாக்கிச்சூடு நடந்தது மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வருத்தம்:
ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ''எனது இனிய நண்பர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கும் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறேன்'' என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். எனது நண்பர் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இந்த நேரத்தில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜோ பைடன் இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார். ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் குவாட் சந்திப்புகளை பற்றிய, முன்னாள் பிரதமர் அபேவின் திறந்த மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த நீடித்த மரபு சார்ந்த பார்வையின் முக்கியத்துவம் பற்றியும் பைடன் குறிப்பிட்டு உள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.