உக்ரைனில் விமான நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், மருத்துவமனைகள், அணுமின் நிலையம், துறைமுகங்கள் எனப் பல உட்கட்டமைப்புகளும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
உடனே போரை நிறுத்த வேண்டும் :
உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
உக்ரைனின் பல்வேறு குடியிருப்புகள், விமான நிலையம், அணுமின் நிலையம் உள்ளிட்டவை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்கு சுமார் 723 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது உக்ரைனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான நிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகள் :
உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார்.இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை.
இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்தார். 'போர் தொடங்கி 2 வாரங்கள் ஆனநிலையில் நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம். எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை.
பேச்சு வார்த்தைக்கு தயார் :
மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார். அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷியாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை.
அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. ரஷிய அதிபர் புதின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். ஆக்சிஜன் இல்லாமல் சுவாசிக்க முயற்சிப்பதற்கு பதில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதற்கான கலந்துரை யாடலை அவர் தொடங்க வேண்டும்' என்று கூறினார்.