Ukraine - Russia Crisis: உக்ரைனுக்கு மேலும் 26,000 கோடி ரூபாய் ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது.
மூன்றாவது நாளாக தொடந்து நடைபெற்று வரும் போரில்,உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கீவ் அருகே 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய படைகள் நெருங்கிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கீவ் நகர மேயர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லை தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் போலந்துக்குள் வந்திருக்கும் 90 சதவீத மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்கிருப்பதாகவும் சிலர் அங்குள்ள உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் சிலர் மட்டுமே எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க இடங்கள் கோரியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டை விட்டு கொடுக்க மாட்டோம் எனவும் எங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் நலனுக்காக போராடுகிறோம் என்று அவர் பேசியுள்ளார். கீவ்வில் சண்டை நடக்கும் நிலையில் உக்ரைன் இருந்து வீடியோ வெளியிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
இந்நிலையில் நோட்டோ அமைப்பு நாடுகள் உதவ முன்வரவில்லை என்றும் தனித்துவிடப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் பேசிய நிலையில், பாதுகாப்பு காரணமாக உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உடனடியாக நிதியுதவி கிடைக்கும் ஆவணத்தில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிற நாடுகள் உடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளதாகவும் ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின் என்றும் உக்ரைன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.