உகாண்டாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கருவுறுதல் சிகிச்சைக்கு பின் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தாயாக மாறுவதற்கு வயது வரம்பு உண்டு. ஆனால் குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு இல்லை என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், ஒரு பெண் தாயாகும் வயது வரம்பை மீறியுள்ளார். இந்த அதிசய சம்பவம் உகாண்டாவில் நடந்துள்ளது.
ஆம்.., உகாண்டாவைச் சேர்ந்த, சஃபினா நமுக்வாயா என்ற 70 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் வயதான தாய் ஆவார். பிறந்த குழந்தைகளில் ஒன்று ஆண் மற்றொன்று பெண். இந்த பிரசவத்திற்கு பிறகு, குழந்தைகள் மற்றும் தாய், மூன்று பேரும் நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் சஃபினா நமுக்வாயா சிசேரியன் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். மருத்துவத் துறையில் உள்ள வல்லுநர்கள் கூட இந்த அற்புதமான பிறப்பு நிகழ்வால் வாயடைக்கிறார்கள்.
சஃபினா நமுக்வாயா கம்பாலாவிலிருந்து மேற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மசாக்காவின் கிராமப்புற பகுதியில் வசிக்கிறார். இவர், கர்ப்பம் மற்றும் குழந்தை வளர்ப்புக்கு சவாலாக கருதப்படும் வயதில் IVF நுட்பத்தின் உதவியுடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். முன்னதாக 2020 ஆம் ஆண்டு, இதேபோன்று IVF சிகிச்சை மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இப்போது இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இது மருத்துவ சாதனையை விட பெரிய சாதனை என்றும், மனித ஆவியின் வலிமை மற்றும் நெகிழ்ச்சிக்கு சான்றாகவும் மருத்துவமனை கூறியது. IVF மூலம் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு நன்கொடையாளரின் முட்டை மற்றும் அவரது கணவரின் விந்து வைக்கப்பட்டது. 31வது வாரத்தில் (வழக்கமாக 34 முதல் 36 வாரங்கள்) குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தன, குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
இரட்டைக் குழந்தைகளைப் பற்றி அறிந்த பிறகு, என் துணை என்னை பாதியில் விட்டுச் சென்றதால், இந்த கர்ப்பம் எனக்கு கடினமாக இருந்தது என்றார் சஃபினா நமுக்வாயா.
IVF எப்படி வேலை செய்கிறது?
IVF என்பது குழந்தை பிறப்பு செயல்முறைகளின் ஒரு சிக்கலான அமைப்பாகும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் இந்த அமைப்பின் மூலம் இயற்கையாகவே குழந்தைகளைப் பெறுகிறார்கள். செயல்முறையின் போது, முதிர்ந்த உயர்தர முட்டைகள் கருப்பையில் இருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்கப்படுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவுற்ற முட்டைகள் கருப்பையில் கரு உருவாக்கம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் வைக்கப்படுகின்றன, அங்கு குழந்தைகள் உருவாகின்றன.