90,000 கோடி இழப்பீடு தரணும்.. டாக்குமெண்ட்ரி எடுத்த பிபிசி-ஐ வச்சு செய்யும் டிரம்ப்!

Published : Dec 16, 2025, 06:18 PM IST
 Donald Trump to sue BBC

சுருக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 6, 2021 அன்று அவர் ஆற்றிய உரையின் காணொளியைத் திருத்தி வெளியிட்டதாக பிபிசி மீது 10 பில்லியன் டாலர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டிஷ் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC) மீது, ஜனவரி 6, 2021 அன்று அவர் ஆற்றிய உரை தொடர்பான திருத்தப்பட்ட (Edited) காணொளியை வெளியிட்டதற்காக அவதூறு வழக்கு (Defamation Lawsuit) தாக்கல் செய்துள்ளார்.

பனோரமா ஆவணப்படம்

2024 அதிபர் தேர்தலுக்கு சற்று முன்னர் பிபிசியின் "பனோரமா" (Panorama) ஆவணப்படத்தில், டிரம்ப் தமது ஆதரவாளர்களை அமெரிக்க கேபிடல் (Capitol) கட்டிடத்தைத் தாக்கும்படி நேரடியாகத் தூண்டியது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அவரது பேச்சின் சில பகுதிகளை பிபிசி திருத்தி இணைத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

டிரம்ப் தமது உரையில், "போராடுங்கள், நரகத்தைப் போலப் போராடுங்கள்" (fight like hell) என்று கூறிய பகுதியைச் சேர்த்த பிபிசி, அதே உரையில் அவர் "அமைதியான போராட்டத்தை" (peaceful protest) வலியுறுத்திய பகுதியைக் வேண்டுமென்றே நீக்கிவிட்டது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியாமி மத்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், டிரம்ப் பிபிசி-க்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 5 பில்லியன் டாலர் வீதம், மொத்தம் 10 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாகக் கோரியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 90,000 கோடி ரூபாய்.

மன்னிப்புக் கேட்ட பிபிசி

சர்ச்சைக்குரிய காணொளித் திருத்தம் தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலுக்காகப் பிபிசி ஏற்கனவே டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இந்தத் திருத்தம் வன்முறைக்கு நேரடியாக அழைப்பு விடுப்பது போன்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்கை எதிர்கொள்ள சட்டரீதியான அடிப்படை ஏதுமில்லை என்று பிபிசி வாதிட்டு வருகிறது.

"மன்னிப்புக் கேட்ட போதிலும், பிபிசி தமது தவறுக்காக உண்மையான மனவருத்தத்தைக் காட்டவில்லை, எதிர்காலத்தில் இதுபோன்ற பத்திரிகை முறைகேடுகளைத் தடுக்க அர்த்தமுள்ள நிறுவன மாற்றங்களையும் செய்யவில்லை" என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

பிசிசி அதிகாரிகள் ராஜினாமா

பிபிசி-யின் 103 ஆண்டு கால வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆவணப்பட விவாதம் காரணமாக, பிபிசி-யின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஏற்கெனவே பதவி விலகியுள்ளனர்.

பிபிசி தலைவர் சமீர் ஷா, டிரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வருத்தம் தெரிவித்தபோதும், டிரம்ப் அதை நிராகரித்துள்ளார்.

டிரம்ப் இதற்கு முன் ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற அமெரிக்க ஊடகங்களுடன் சமரசம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிட்னி கடற்ரையில் துப்பாக்கிச்சூடு நடந்தியவர் இந்தியர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!