
வட இந்தியாவில் பருவ காலப் பயிர்க் கழிவுகளை எரிக்கும் நேரம் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மாறியுள்ளது என்றும், இந்த மாற்றம் காற்று மாசுபாட்டின் தீவிரத்தைக் கண்காணிக்கும் முயற்சிகளை சிக்கலாக்கும் என்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் செயற்கைக்கோள் ஆய்வுகள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கால மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.
விவசாயிகள் பொதுவாக அறுவடைக்குப் பிறகு பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள் தான் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைத்து வந்தனர். இப்போது இந்த நடைமுறை மாறி, பெரும்பாலான பயிர்க் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் தற்போது மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் நடைபெறுகின்றன.
"கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகள் தங்கள் வழக்கத்தை மாற்றியுள்ளனர்," நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹிரேன் ஜெத்வா குறிப்பிட்டுள்ளார்.
பயிர்க் கழிவுகள் எரிக்கும் நேரம் பிற்பகலில் இருந்து மாலை நேரத்துக்கு மாறியிருப்பது, காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
MODIS அல்லது VIIRS போன்ற வழக்கமான செயற்கைக்கோள் உணர்விகள் ஒரு நாளைக்கு ஓரிரு முறை மட்டுமே ஒரு இடத்தைக் கடந்து செல்லும். இதனால், மாலை நேரத்தில் நடக்கும் தாமதமான எரிப்பு நிகழ்வுகளை அவை தவறவிடுகின்றன.
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் தகவல்களைச் சேகரிக்கும் தென் கொரியாவின் GEO-KOMPSAT-2A போன்ற புவிநிலை செயற்கைக்கோள்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் ஜெத்வா இந்த மாற்றத்தைக் கண்டறிந்தார்.
மாலை நேரங்களில் காற்று வேகம் குறைவாகவும், பூமியின் வளிமண்டல எல்லையின் உயரம் (boundary layer) ஆழமற்றதாகவும் இருக்கும். இதனால், மாலை நேரத்தில் வெளியிடப்படும் புகை இரவு முழுவதும் காற்றின் தரத்தை மிகவும் மோசமாக்குகின்றன.
2025 ஆம் ஆண்டு, நவம்பர் 11 அன்று, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் பரவிய புகை மூட்டத்தை நாசாவின் Aqua செயற்கைக்கோளின் MODIS கருவி படமெடுத்தது. இந்தச் சமயத்தில், டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 400-ஐ தாண்டி, மிக மோசமான நிலையை எட்டியது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுபாட்டில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு 10 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.