
பிரபலமான சீன சமூக ஊடக செயலியான டிக்டாக்கை வாங்க மிகப்பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் அமெரிக்காவுடன் இப்போது ஒரு ஒப்பந்தம் உள்ளது எனக் கூறினார். டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் உரிமையை மாற்றுவது தொடர்பாக அவரது நிர்வாகம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரீர் ஆகியோர் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் தலைமையிலான குழுவுடன் மாட்ரிட்டில் இரண்டாவது நாளாக வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்திய மறுநாள் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரு தரப்பினரும் டிக்டாக் ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப விவரங்களை இறுதி செய்ய மாட்ரிட் வந்தடைந்தனர். வர்த்தகம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சீனாவின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கக்கூடும் என ஒரு அமெரிக்க அதிகாரி ப்ளூம்பர்க் நிறுவனத்திடம் தெரிவித்தார். சீனா வர்த்தகப் பிரச்சினைகளை டிக்டாக் ஒப்பந்தத்துடன் இணைக்க முயலும் அதே வேளையில், அமெரிக்கா அந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை, டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்புக்கான ஒரு முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
டிக் டாக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. டிக்டாக்கின் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ், அதன் அமெரிக்க செயல்பாடுகளை அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட வாங்குபவருக்கு, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விற்கத் தவறினால் அல்லது பெய்ஜிங் அந்த விற்பனைக்கு அனுமதி மறுத்தால், அமெரிக்காவில் அந்த செயலி "இருட்டாகி" விடும். ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது நிர்வாகம் "அதை இறக்க விடத்" தயாராக இருப்பதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த வாங்குபவரின் பெயரை டிரம்ப் நிர்வாகம் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த குழு ஒரக்கிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் லாரி எலிசன் தலைமையிலானது என பரவலாக நம்பப்படுகிறது. எலிசன் ஒரு அறியப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் ஆவார். எலிசன் டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை வாங்குவதற்கு தான் ஆதரவு அளிப்பதாக டிரம்ப் ஜனவரியில் கூறியிருந்தார்.
பைட் டான்ஸின் அமெரிக்க டிக்டாக் வணிகத்தை ஒரு அமெரிக்க ஆதரவு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டிரம்ப் தனது காலக்கெடுவை மீண்டும் மீண்டும் நீட்டித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக அமெரிக்காவில் டிக்டாக்-க்கு தடை விதிக்கும் இரு கட்சி மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றி, முன்னாள் அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்ட பிறகு அழுத்தம் அதிகரித்தது. பைட் டான்ஸ் அதன் அமெரிக்க பங்குகளை விற்கிறதென்றால், டிக்டாக்-க்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அந்த மசோதா கூறியது.
ஜனவரி 18-ஆம் தேதி, அயல்நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள செயலிகள் சட்டம் (Foreign Adversary Controlled Applications Act) நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, டிக்டாக் அமெரிக்காவில் முடக்கப்பட்டது.
ஜனவரி 20-ஆம் தேதி வெளியான நிர்வாக ஆணைப்படி, இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின் இந்தக் காலக்கெடு செப்டம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டது.