
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய பொருளாதார மசோதா குறித்து எலான் மஸ்க் தெரிவித்த விமர்சனங்கள் தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இது ஏற்கெனவே இருவருக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் டிரம்ப்பின் பேச்சு அதனை மீண்டும் உறுதிபடுத்துகிறது.
அமெரிக்காவில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பொருளாதார மசோதாவை எலான் மஸ்க், "அருவருப்பானது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த மசோதா தான் டிரம்ப் அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் மையப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "எலானுக்கும் எனக்கும் ஒரு சிறந்த உறவு இருந்தது. இனிமேல் அப்படி இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரது விமர்சனங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன" என்றார்.
மசோதா குறித்து மஸ்க் நன்கு அறிந்திருந்தார் என்றும், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் டிரம்ப் வாதிட்டார். ஆனால், எலான் மஸ்க் டிரம்பின் கூற்றை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "இந்த மசோதா ஒருமுறை கூட எனக்குக் காட்டப்படவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா மின்சார வாகனங்களுக்கான மானியங்களைக் குறைப்பதாகவும், அது தனது டெஸ்லா நிறுவனத்தைப் பாதிக்கும் என்பதால் எலான் மஸ்க் அதிருப்தி அடைந்துள்ளார் என டிரம்ப் கூறுகிறார். மேலும் நாசாவிற்காக அவர் பரிந்துரைத்த நபரை தான் திரும்பப் பெற்றதாலும் அவர் அதிருப்தியில் இருக்கலாம் என டிரம்ப் கூறியிருக்கிறார்.
டிரம்ப்பின் இந்த விமர்சனங்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், "இது தனிப்பட்டதல்ல, இது கொள்கை சார்ந்தது. நல்ல கொள்கை புதுமையை உருவாக்கும். மோசமான கொள்கை திறமையின்மையைப் அதிகப்படுத்தும். இதைச் சொல்வதற்கு நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பும், எலான் மஸ்கும் நெருங்கிய உறவில் இருந்து வந்தனர். டிரம்ப், எலான் மஸ்கின் மேதைமையைப் பாராட்டினார். எலான் மஸ்க்கும் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியதை வரவேற்றார். டிரம்ப் இரண்டாவது முறை அதிபரானதும் எலான் மஸ்க் தனது அரசின் செலவினக் குறைப்புப் பிரிவின் தலைவராக நியமித்தார். டிரம்ப் மஸ்கிற்கு அதிப்படியான அதிகாரங்களை வழங்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையிர், டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள புதிய பொருளாதார மசோதா குறித்த கருத்து வேறுபாடுகள் அவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. இதன் எதிரொலியாக டிரம்ப் வழங்கிய பதவியில் இருந்தும் எலான் மஸ்க் விலகி இருக்கிறார்.