முடிவுகள் வெளியான பின் டிரம்ப்பை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய விவேக் ராமசாமி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலை பெற்றதை அடுத்து இந்த முடிவை அறிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் மாகாண அளவிலான உள்கட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனால், அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் ட்ரம்ப் 51 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது நெருங்கிய போட்டியாளராகக் கருதப்பட்ட புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் 21 சதவீதமும், முன்னாள் தென் கரோலினா ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி 19 சதவீதமும் வாக்குகள் பெற்றனர்.
விவேக் ராமசாமி 8 சதவீதம் வாக்குகளைப் பெற்று நான்காவது இடம் பிடித்தார். இந்த முடிவை அடுத்து, அதிபர் போட்டியிலிருந்து விலகி டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகக் கூறியிருக்கிறார். முடிவுகள் வெளியான பின் டிரம்ப்பை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய விவேக் ராமசாமி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாகாணப் பிரதிநிதிகளில் 1.6 சதவீதத்தினர் மட்டுமே அயோவாவில் உள்ளனர். அடுத்த வாரம் நியூ ஹாம்ப்ஷயரில் இதேபோன்ற தேர்தல் நடக்க உள்ளது. நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றிக்குப் பின் பேசிய டொனால்டு ட்ரம்ப், "நாங்கள் ஒன்று சேர விரும்புகிறோம். குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் சரி, தாராளவாதமாக இருந்தாலும், பழமைவாதியாக இருந்தாலும் சரி, நாம் ஒன்று கூடி பிரச்சனைகளை எதிர்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.