இந்நிலையில் உலக அளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 5 லட்சத்து 53 ஆயிரத்து 731 பேர் அதிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் .
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் ஒரு பக்கம் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் , இதுவரை 5 லட்சத்து 53 ஆயிரத்து 731 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் , இந்த தகவல் உலக அளவில் கொரோனா பீதியில் உறைந்துள்ள மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது .கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு மாதத்திற்கும் மேலாக சீனாவை கபளிகலம் செய்தது பின்னர் அது அங்கிருந்து மெல்லமெல்ல பல நாடுகளுக்கு பரவி தற்போது சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் தன் கொடூர கரத்தை படரவிட்டுள்ளது . இந்நிலையில் அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , பிரிட்டன் , உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன .
இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கொடூர தாண்டவமாடுகிறது , இதுவரையில் இந்த வைரசுக்கு அமெரிக்காவில் 6 லட்சத்து 78 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , சுமார் 34 ஆயிரத்து 641 பேர் உயிரிழந்துள்ளனர் . பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது . அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 941 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சுமார் 22 ஆயிரத்து 170 பேர் உயிரிழந்துள்ளனர் . பிரான்சில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 920 ஆக உள்ளது .இந்நிலையில் இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கிறது , இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .
ஒருபுறம் கட்டுக்கடங்காமல் வைரஸ் தொற்று ஏற்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் மறுபுறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர் . அந்த வகையில் சீனாவில் 57 ஆயிரத்து 844 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் . ஸ்பெயினில் இதுவரை 74 ஆயிரத்து 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . உலகிலேயே அதிகபட்சமாக ஜெர்மனியில் இதுவரை 81 ஆயிரத்து 800 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் . இத்தாலியில் 40,000 பேர் , பிரான்சில் 32,000 பேர் , சீனாவில் 77 ஆயிரத்து 944 பேர் , ஈரானில் 52 ஆயிரத்து 229 பேர் என அதிக பட்ச அளவில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் . இந்நிலையில் உலகஅளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 5 லட்சத்து 53 ஆயிரத்து 731 பேர் அதிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் . கொரோனா வந்தால் நிச்சயம் மரணம்தான் என்ற அச்சத்தில் கதிகலங்கி போயுள்ள மக்கள் மத்தியில், பலர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது, மக்கள் மத்தியில் இந்த வைரசை நிச்சயம் எதிர்த்து போராடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.