இந்தியா-சீனா இடையே மோதல் அதிகரித்தால் டரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 11, 2020, 11:43 AM IST

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார், கிழக்கு லடாக் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில்  ஜான் போல்டனின் இந்த கருத்து ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியில் இருந்து தங்களது படைகளை இரு நாடுகளும் பின்நேக்கி நகர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாயிண்ட் 15ல் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய-சீன படைகள்  திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்து எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வந்ந நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், பேட்ரோலிங் பாயிண்ட்-15 இல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கி உள்ளன. தற்போது, சீனா அங்கு ஏற்கனவே  உருவாக்கிய கூடாரங்கள் மற்றும் ஹெலிபேட் போன்ற கட்டமைப்புகளும் மற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள  விரல் 4, ஹாட் ஸ்ப்ரிங்ஸ்,  கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்ப பெற்றிருப்பதாகவும், அங்கிருந்து தனது வாகனங்கள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை முற்றிலும் அகற்றியிருப்பதாகவும் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாடுகளைம் படைகளை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக  எல்லையில் நீடித்து வந்த  பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது, ஆனாலும் கால்வான் பள்ளத்தாக்குக்கு சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதால் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையே உள்ளது. 

இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துவருகிறது. இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு மனப்பாங்குடன் நடந்து கொள்வதாகவும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசியாவில் சீனாவால் மிரட்டப்படும் நாடுகளுக்கு ஆதரவாக, ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள அமெரிக்க படைகளை ஆசியக் கண்டத்திற்கு இடமாற்றம்  செய்யப்போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார். மொத்தத்தில் கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாகவே ஆதரவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இதற்கு  நேரெதிரான கருத்தை அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார், அதாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனக் கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ள பெட்டியில்,  இந்திய-சீன விவகாரத்தைப் பொறுத்தவரையில் டொனால்ட் ட்ரம்ப் எந்த வழியில் செல்வார் என்று எனக்கு தெரியாது. அது அவருக்குத் தான் தெரியும். 

ஆனால் சீனா அதன் எல்லையை விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது, உண்மையிலேயே கிழக்கு மற்றும் தென் சீன கடலில் போர்க்குணமிக்க பாணியில் அது நடந்து கொண்டிருக்கிறது. ஜப்பானுடனான அதன் உறவு மோசமாகியுள்ளது, இந்தியாவுடன் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அரசியல் மற்றும் ராணுவ வழிகளில் மட்டுமல்லாமல் பெல்ட் சாலை திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி அந்நாடுகளை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையேயான பிரச்சினையை ட்ரம்ப் எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார் என்று எனக்கு தெரியவில்லை, அதே நேரத்தில் இந்த மோதலுக்கான வரலாறு பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்றும் என்னால் கூற முடியாது. ஆனால் நான் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லமுடிவும், இந்நேரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் அதிகரித்தால் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சீனாவுடனான உறவை அவர் வெறும் வர்த்தகமாக மட்டுமே பார்க்கிறார் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜான் போல்டனின் இந்த கருத்து  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!