தமிழ் மாணவர்கள் கொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
தமிழ் மாணவர்கள் கொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில்  போராட்டம்

சுருக்கம்

கொழும்பு, அக். 25-

யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

யாழ்ப்பாணம் குளப்பிடி சந்திப்பு பகுதியில் உள்ள கொக்குவில் சோதனைச் சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இரு பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். முதலில் மாணவர்களை கொலை செய்யவில்லை, அந்த மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்தனர்.

 

ஆனால், உடற்கூறு ஆய்வுக்குப்பின் மாணவர்கள் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் எடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒத்துக்கொண்டனர். இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் படுகொலை தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என போலீஸ்துறை தலைவருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இந்த கொலைக்கு நீதி கேட்டு யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

மேலும், வடமாநில ஆளுநர் அலுவலகம், யாழ்ப்பாணம் அரசு செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  கொலைசெய்யப்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி மாணவர்கள் கோஷமிட்டனர். மாணவர்கள்கையில் போலீசாரின் அடுக்குமுறைகளைக் கண்டித்த பதாகைகள் வைத்திருந்தனர்.  இதனால், முக்கிய ஏ9 நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து தடை ஏற்பட்டது.

 

இது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமசந்திரன் கூறுகையில், “ தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், யாழ்ப்பாணத்தில் மீண்டும் ராணுவத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கையில் உள்ள 6 முக்கிய தமிழர் அமைப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!