கஞ்சா போதைப்பொருள் இல்லையா? பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கியது தாய்லாந்து!!

By Narendran S  |  First Published Jun 10, 2022, 10:28 PM IST

போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கம் செய்து தாய்லாந்து அரசு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கம் செய்து தாய்லாந்து அரசு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடும் அதன் விற்பனையும் மிகப் பெரியதாக உருவெடுத்து வருகிறது. போதைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதால் அதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோக்கைன் போன்ற போதைப் பொருட்களைத் தடை செய்து, அதன் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல கஞ்சாவுக்கும் உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இருப்பினும், கஞ்சாவைக் குறைந்த அளவில் முறையாகப் பயன்படுத்தினால், அது மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதால் கஞ்சாவுக்கு தடை விதிக்கக் கூடாது என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின. அதன்படி ஆப்பிரிக்காவில் சில நாடுகளில் கஞ்சாவை குறைந்த அளவில் வைத்திருப்பது குற்றம் இல்லை என்று அறிவித்துள்ளன. இப்போத இதே முறையை ஆசிய நாடு ஒன்றும் பின்பற்றி உள்ளது.

Tap to resize

Latest Videos

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கஞ்சாவுக்கான தடையை நீக்கிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை தாய்லாந்து பெற்றுள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், கூறுகையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்வது குற்றமில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் போதைக்காகக் கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது தான். கஞ்சா தயாரிப்புகள், உற்பத்தி, பயன்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த விதிமுறைகளை உருவாக்க உள்ளோம். பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்தால் அவர்களுக்கு 800 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். மருத்துவ பயன்பாடுகளுக்காகக் கஞ்சா பயன்படுத்த மட்டுமே அனுமதி அளித்துள்ளோம்.

வெறும் போதைக்காக இல்லை. உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் கஞ்சாவை கொண்ட உணவு மற்றும் பானங்களை வழங்கலாம், ஆனால் அதில் 0.2 சதவீதத்திற்கும் குறைவான டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) இருக்க வேண்டும். பொது இடங்களில் கஞ்சாவை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அதை மறந்துவிடுங்கள். இதை நான் குறிப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மருத்துவ பயன்பாடுகளுக்குக் கஞ்சாவைப் பயன்படுத்த மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொழில்துறையின் மதிப்பு எளிதில் $2 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு 1 மில்லியன் இலவசமாகக் கஞ்சா செடிகளை விநியோகிக்க விவசாய அமைச்சகத்துடன் ஆலோசித்து வருகிறோம். கஞ்சா செடிகளை வளர்க்க மிகச் சிறந்த ஒரு இடமாக தாய்லாந்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

click me!