
எகிப்து தலைநகர் கெய்ரோவில் பதின்மூன்று வயது சிறுவன் சமைக்காத இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, அந்தச் சிறுவன் மூன்று பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டுள்ளான். நூடுல்ஸ் சாப்பிட்ட அரை மணி நேரத்தில் அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலி, அதிகப்படியான வியர்வை, வாந்தி போன்ற அறிகுறிகளுடன் அவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளான்.
முதலில், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை விற்ற கடைக்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்தப் பொருள் காலாவதியாகிவிட்டதா அல்லது சுகாதாரமற்றதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், பரிசோதனைகளுக்குப் பிறகு அந்த நூடுல்ஸில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மரணம் ஏன் ஏற்பட்டது?
சிறுவனின் திடீர் மரணத்திற்குக் காரணம், குடல் அடைப்பு (intestinal obstruction) என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அவன் ஒரே நேரத்தில் அதிக அளவில் சமைக்காத நூடுல்ஸை உட்கொண்டதே இதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எகிப்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அவற்றில் சேர்க்கப்படும் செயற்கைப் பொருட்கள் குறித்து கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான நொறுக்குத் தீனிகள்
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சிப்ஸ் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகள் பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய உணவுகளாக உள்ளன. இத்தகைய உணவுகளை அடிக்கடி உட்கொள்வது உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
'சியோலில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உட்கொள்வது கார்டியோமெட்டபாலிக் ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையது' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இன்ஸ்டன்ட் நூடுல்ஸை அடிக்கடி சாப்பிடும் இளைஞர்களுக்கு அதிக ட்ரைகிளிசரைடுகள், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சோகமான சம்பவம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளும் பழக்கத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.