கொரோனா தடுப்பில் மும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பில் மும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டியுள்ளார். கண்ணுக்கு தெரியாத உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸை தடுக்க, அனைத்து நாடுகளும் முழு வீச்சில் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகள் நோய் பரவலுக்கு மையமாகிவிடக் கூடாது என்றும் அந்தப் பகுதிகால் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு நாடுகளும் கொரோனா வைரஸை தடுக்கும் முறைகள் பற்றி செய்திக்குறிப்பு வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் , மும்பையின் தாராவி கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் பகுதியாக மாறியிருக்கிறது என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான .சுமார் ஆறரை லட்சம் மக்கள் வசிக்கும் தாராவியில் தற்போது 166 பேர் மட்டுமே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா முதல்வர், மும்பை மாநகராட்சியின் தொடர் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் தாராவி மக்கள் இருப்பதால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 82 சதவீதம் பேர் குணமடைந்து விட்டார்கள். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தாராவி மக்கள் உலகுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். மும்பைக்கு தாராவி என்றால், சென்னைக்கு கண்ணகி நகர் . தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில், சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் வசிக்கும் கண்ணகி நகரில், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக, தற்போது 238 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இங்குள்ள மக்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக விலகலையும் கட்டாயமாக கடைபிடிக்கும் நிலையை மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். அடிக்கடி கைகளை கழுவ தெருக்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்தப் பகுதி வைரஸ் பரவும் மையமாக மாறிவிடுமோ என்று எல்லோரும் அஞ்சிய நிலையில், இன்று சுய கட்டுப்பாடுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் கண்ணகி நகர் நிமிர்ந்து நிற்கிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மும்பையின் தாராவியும் நம் சீர்மிகு சென்னையின் கண்ணகி நகரும், மன உறுதியை சீர்குலைத்து அன்றாட வாழ்வியலை முடக்கவல்ல நமது ஒரே எதிரியான கோவிட்-19 என்கிற கொடிய கொள்ளை நோய் தொற்றுக்கு எதிராக போரிடும் அனைவருக்குமே நம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளி நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தங்களையும் பிறரையும் காக்க உதவும் அனைவருமே பாராட்டப்பட வேண்டிய கோவிட் வீரர்கள்! என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, ஊட்டச்சத்து மிகுந்த உணவு போன்ற தடுப்பு நடவடிக்கைகளே , கொரோனாவை வெல்லும் கேடயங்கள் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி சமூக ஊடகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.