ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கை!

By Manikanda Prabu  |  First Published Jul 18, 2023, 3:36 PM IST

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது


ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. தூதுக்குழுவானது, கடந்த மே மற்றும் ஜூன் மாத நடவடிக்கைகளை உள்ளடக்கிய, அந்நாட்டு மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான் அதிகாரிகள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆப்கனில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தேர்வை ஆண்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள் தலிபான் அரசின் பொது சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கான தடை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மருத்துவ மாணவிகள் பட்டப்படிப்பு தேர்வு எழுத கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. பெண்களின் சுதந்திரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில், தலிபான்கள் அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான நிகழ்வுகளை பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே மாத தொடக்கத்தில், ஆண் துணை இல்லாமல் பயணித்த சர்வதேச அரசு சாரா அமைப்பின் இரண்டு ஆப்கானிஸ்தான் பெண் ஊழியர்கள் தலிபான் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், கடந்த ஜூன் மாதம் மருத்துவ ஊழியரான பெண் ஒருவர், தாலிபான் உளவுத்துறையால் ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தனது பணியை அவர் தொடர்ந்தால் கொலை செய்யப்பட்டு விடுவதாக மிரட்டப்பட்டுள்ளார். இதன் விளைவாக இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தனது பணியை ராஜினாமா செய்ததாகவும் ஐ.நா., அறிக்கை கூறுகிறது.

தங்கள் அலுவலகங்களில் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை தலிபான் அரசு ரத்து செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக ஐ.நா., அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பூங்கா ஒன்றில் இருந்த பெண் ஒருவரை அங்கிருந்து வெளியேறும்படி தலிபான்களின் நல்லொழுக்கத் துறையைச் சேர்ந்தவர்கள் தடியால் அடித்தது உள்ளிட்ட சில சம்பவங்களும் அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடங்கியது குளிரகாலம்! கொரோனா பரவலை தவிர்க்க எல்லா குடும்பங்களுக்கும் ART கருவிகள்! சிங்கப்பூர் அரசு!

தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலிபான்களால் அந்நாட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஆப்கனை கைபற்றிய நேட்டோ படைகள் வரவுக்கு பின்னர், பெண்கள் கல்வி கற்றனர். ஜனநாயக ரீதியான விஷயங்கள் ஆப்கனில் அமலில் இருந்தன.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சி போன்று செயல்பட மாட்டோம் என்று கூறி வந்தனர். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு, மீண்டும் தங்களது பழைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது.

பொது வாழ்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பெரும்பாலானவற்றில் பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஊடக சுதந்திரத்தையும் நசுக்கியுள்ளனர். ஆறாம் வகுப்பை தாண்டி பெண்கள் படிக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானியப் பெண்கள் உள்ளூர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் தடையானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

தலிபான்களின் இந்த நடவடிக்கைக்க்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. இதனால், அந்நாட்டில் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

1996 முதல் 2001 வரையிலான தலிபான்களின் முதல் ஆட்சிகாலத்தில் பொதுவெளியில், உடல் ரீதியான தண்டனை மற்றும் மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு, கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் அட்சி அதிகாரத்திற்குத் திரும்பிய பின்னர், முதலாவதாக, கடந்த டிசம்பர் மாதம் மேற்கு ஃபரா மாகாணத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில், கொலை குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் தந்தையால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டாவதாக, தலைநகர் காபூலில் ஐந்து பேரைக் கொலை செய்த குற்றவாளியாக கண்டறியப்பட்ட ஒருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 274 ஆண்கள், 58 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகியோருக்கு பொதுவெளியில் கசையடி தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த மே மாதம் ஐ.நா., தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!