சீனாவின் தொடர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளால் தைவான் அரசு தனது நாட்டில் உள்ள இளைஞர்கள் ஓராண்டு கட்டாய ராணுவப் பணியில் சேரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
1949ஆம் ஆண்டில் முடிவுற்ற சீன உள்நாட்டுப் போருக்குப் பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால், சீனா தைவான் மீது தொடர்ந்து உரிமை பாராட்டி வருகிறது. பிற நாடுகள் தைவானுடன் நட்புறவு கொள்வதையும் சீனா எதிர்க்கிறது. தேவைப்பட்டால் தைவானை போர் மூலம் முழுமையாகக் கைப்பற்றவும் சீனா ஆயத்தமாக உள்ளது.
இந்நிலையில், தைவான் அரசு அந்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டாய ராணுவ சேவை திட்டத்தை நான்கு மாதங்களில் இருந்து ஓராண்டாக நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் அறிவித்து்ள்ளார். இதன்படி தைவானில் ஜனவரி 1, 2005 க்குப் பிறகு பிறந்த ஆண்கள் அனைவரும் கட்டாயமாக ஓராண்டு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அமெரிக்காவை அலறவிடும் பனிப்புயல்: நடுங்க வைக்கும் காட்சிகள்!
இது சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தைவான் எடுத்துள்ள நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தைவான் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருவதும் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தைவான் - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் சட்டமசோதா ஒன்று அமெரிக்காவில் கடந்த வாரம் கையெழுத்தானது.
இதனால் சீண்டப்பட்ட சீனா அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தைவான் அரசு அமெரிக்காவின் சட்டமசோதாவை வரவேற்றது. இதனால் சீனா தைவானைச் சுற்றி வளைத்து போர் பயிற்சியை நடத்திவருகிறது. சீனா தைவானச் சுற்றி நடத்தும் போர்ப்பயிற்சி போருக்கான ஒத்திகை என்று தைவான் குற்றம்சாட்டுகிறது.