
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதித்துறை வளாகம் (Judicial Complex) அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் ஆவர்.
இன்று மதியம் 12.30 மணியளவில், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் இதை தற்கொலைத் தாக்குதல் என்று சந்தேகிக்கின்றனர். மிகவும் பரபரப்பான நேரத்தில் நிகழ்ந்த இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பு சத்தம் சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. "நான் எனது காரை நிறுத்திவிட்டு வளாகத்திற்குள் நுழைந்தபோது, ஒரு பயங்கர சத்தம் கேட்டது... இரண்டு சடலங்கள் வாசலில் கிடப்பதையும், பல கார்கள் தீப்பிடித்து எரிவதையும் நான் பார்த்தேன்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் ருஸ்தம் மாலிக் ஏஎஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள கேடட் கல்லூரி வானா (Cadet College Wana) மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan - TTP) அமைப்பினர் நடத்தவிருந்த தாக்குதல் முயற்சியை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நடவடிக்கையின்போது இரண்டு டி.டி.பி. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 2014-ஆம் ஆண்டு பெஷாவரில் இராணுவப் பள்ளியில் நடந்த தாக்குதலைப் போலவே ஒரு சம்பவத்தை மீண்டும் நிகழ்த்த முயன்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. 2014 தாக்குதலில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வந்ததிலிருந்து, பாகிஸ்தானில் டி.டி.பி-யின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. டி.டி.பி தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ந்து குற்றம் சாட்டுவதால், இது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகளின் மோசமடைவுக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
திங்கட்கிழமை டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். அதற்கு மறுநாள் இஸ்லாமாபாத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.