சூடான் நாட்டில் அதிகார துஷ்பிரயோகம் போராக மாறி தற்போது ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. கடுமையான மோதலுக்குப் பின்னர் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் தலைநகரான கார்டோம் நகரில் கேரளாவைச் சேர்ந்த 200 பேர் உள்பட மொத்தம் 4000த்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கடுமையான போர் நடந்து வந்த காரணத்தால், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அந்த நாட்டின் ராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைக்கும் இடையே கடந்த சனிக்கிழமை முதல் போர் நடந்து வந்தது.
சூடானில் இருந்து இந்தியர்கள் சிலர் தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு அங்கு நடக்கும் இயல்பு நிலை குறித்து தெரிவித்துள்ளனர். அதில், இருதரப்பு மோதலால் தங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படி தள்ளப்பட்டுள்ளனர், வெளித்தொடர்புகள் முற்றிலும் தடைபட்டுள்ளது, இரவில் தூங்கக் கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். வீட்டில் இருப்பவர்கள், பங்கரில் இருப்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் என்று யாராக இருந்தாலும், உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றனர்.
undefined
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். இது அரசியல் ரீதியாகவும் இந்தியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த செய்தியும் வெளியாகி வருகிறது.
கார்டோமில் இருந்து பெரும்பாலான சூடான் மக்கள் வெளியேறி வருகின்றனர். நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பாட்டில் தண்ணீர், ரொட்டி, பால் என அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொலைதொடர்புகளும் தடைபட்டுள்ளது. விலைவாசியும் உயர்ந்துள்ளது. வெப்பமும் 43 டிகிரியாக அதிகரித்து, ஏசி இல்லாமல் மக்கள் அவஸ்தைப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சூடானில் இருந்து தப்பித்து வரலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை. விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்து இருப்பதால், விமான நிலையமும் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்தியா திரும்புவதற்கு பலரும் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று ஈத் என்பதாலும், நாளை ரம்ஜான் என்பதாலும் முஸ்லிம் மக்கள் தங்களது உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த போர் நிறுத்தம் குறித்தும் இதுவரை ராணுவம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போதைய அறிவிப்பும் போர் நிறுத்தத்தை கொண்டு வருமா என்பதும் சந்தேகமே என்று கூறப்படுகிறது. சூடானில் அதிகமாக முஸ்லிம் மக்கள் இருப்பதால் ரமலான் மாத முழுவதும் விரதம் இருந்து இன்று ஈத் கொண்டாடுவார்கள். தங்களது உறவினர்களை சந்திப்பது, விருந்து வைப்பது என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
இரண்டு தரப்பிலும் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. அமெரிக்கா, ஐநா இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு -போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.