உலகளவில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் , இதுவரை உலக அளவில் சிகிச்சை பெற்று இந்த வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 24 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொத்துக் கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு ஆட்பட்டுவரும் நிலையில் இதுவரை இந்த வைரசிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது . கொரோனாவால் குலை நடுங்கி நிற்கும் மக்கள் மத்தியில் இந்த தகவல் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது . கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கிருந்து மெல்ல மெல்ல பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியது . தற்போது கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அது தனது கொடூர கரத்தை பரப்பியுள்ள நிலையில் உலக அளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 90 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது . உலக அளவில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.
இந்த வைரஸ் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. அறிவியல் , மருத்துவம் , பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் உலக வல்லரசு என பெயர் பெற்ற அமெரிக்கா , சீனாவில் இருந்து தோன்றிய இந்த வைரஸால் மூன்றே மாதங்களில் நிலைகுலைந்து போயுள்ளது . கிட்டத்தட்ட அமெரிக்காவில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது . அங்கு இதுவரை 94 ஆயிரத்து 941 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மொத்த பொருளாதாரமும் அதளபாதாளத்திற்கு சரிந்துள்ளது. அதேபோல் நோய் பாதித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ரஷ்யாவில் இதுவரை மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது . ஆனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கூட தாண்டவில்லை என்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது . இதற்கடுத்த நிலையில் பிரேசில் , ஸ்பெயின் , பிரிட்டன் , இத்தாலி , பிரான்ஸ் , ஜெர்மனி , துருக்கி, ஈரான் , இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவுக்கு அடுத்து உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது . இதுவரை சுமார் 3 ஆயிரத்து 432 பேர் உயிரிழந்துள்ளனர் . அதே நேரத்தில் சுமார் 45 ஆயிரத்து 422 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர் . வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளான , ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 27 ஆயிரத்திலிருந்து 32,000 ஆக இருந்து வருகிறது . பிரிட்டனில் மட்டும் 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் . உலகளவில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் , இதுவரை உலக அளவில் சிகிச்சை பெற்று இந்த வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 24 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் புது நம்பிக்கையையும் இந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற மன தைரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.