கடந்த புதன்கிழமை ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவையில் பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் டட்டியானா கோலிகோவா ரஷ்யாவில் மொத்தம் 47 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக 3.1 பில்லியன் ரூபிள், ( 43 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடிவரும் நிலையில் , இந்த வைரசுக்கு எதிராக தங்கள் நாட்டில் 47 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது . அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் பேசிய ரஷ்யத் துணைப் பிரதமர் டட்டியானா கோலிகோவா இவ்வாறு கூறியுள்ளார் . கொரோன வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தில் 90 ஆயிரத்தை எட்டியுள்ளது . இதுவரை இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 29 ஆயிரத்து 239 ஆக உயர்ந்துள்ளது . கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
அதற்கு அடுத்ததடுத்த இடங்களில் பிரேசில் , ஸ்பெயின் , பிரிட்டன் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம்பிடித்துள்ளன. ஆரம்பத்தில் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்திருந்த நிலையில் அதிலிருந்து சற்று பாதுகாப்பாக இருந்த ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது. இதனால் அங்கு மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிவரும் நிலையில் கடந்த சில வாரங்களிலேயே ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது . ஆனாலும் அங்கே பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 2972 மட்டுமே என்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது . ஆனாலும் அங்கு நோய் பாதிப்பு இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அமெரிக்காவுக்கு இணையான வல்லரசான ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
கடந்த புதன்கிழமை ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவையில் பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் டட்டியானா கோலிகோவா ரஷ்யாவில் மொத்தம் 47 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக 3.1 பில்லியன் ரூபிள், ( 43 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . அதில் சுமார் 14 தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து திறம்பட செயல்பட கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார் . இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் ஒரு மாதகால சோதனைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் ஒரு தடுப்பூசி தயாராகும் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் , துணை பிரதமர் டட்டியானாவின் இத்தகவல் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.