இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களை பசி, பட்டினியில் இருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களை பசி, பட்டினியில் இருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு பல முக்கிய நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறைப்பு, பொருளாதார மேம்பாடுகள் நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வருகிறது. இலங்கை அரசு தற்போது பல முக்கியப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி இருப்பின் அளவை மேம்படுத்தவும், தொடர்ந்து குறைவதைத் தடுக்கவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தடை விதிப்பும், அதிகப்படியான விரி விதிப்பையும் விதிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
மேலும் இலங்கை பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு 3 பில்லியன் டாலர் அளவிலான கடன் பெற IMF உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதனிடையே இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனிடையே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வரிகள் மற்றும் ஆடம்பர பொருட்களின் விலையை 2 மடங்கு உயர்த்தி பிரதமர் ரணில் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ரணில், வரும் செப்டம்பர் மாதம் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களை பசி, பட்டினியில் இருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பலருக்கு ஒரு வேளை உணவுக் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்று தெரிவித்தார். இதனிடையே வரும் காலங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டதால் உணவுப் பொருட்கள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எரிபொருள், உணவு பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.