இலங்கை 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதை அடுத்து, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வாகன ஓட்டிகளுக்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதை அடுத்து, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வாகன ஓட்டிகளுக்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இன்றைய பெரிய அளவிலான பொருளாதார சிக்கலுக்கு கொரோனா காலங்களில் தொழில் பாதிப்பு என்று கூறப்பட்டாலும், அதற்கு முன்பு வாங்கிய கடனும் அந்த நாட்டை பெரிய அளவில் பாதித்துள்ளது. மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். பணவீக்கம் பெரிய அதிகரித்து பொருட்களின் விலை விண்ணை முட்டியுள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது. விவசாயம் பாதித்துள்ளது.
அந்த நாட்டில் வசிக்கும் தமிழர்கள் ராமேஸ்வரம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து கொண்டுள்ளனர். இதுவரை 90 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். உண்பதற்கு உணவு இல்லாமல் மயங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்குள் வந்தடைந்துள்ளனர். இலங்கை வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் முறையாக அவர்களை சென்று அடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பும் வெறும் 22மில்லியன் டாலராக குறைந்து உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருட்கள் வாங்க முடியாமல் பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பெட்ரோல், டீசல் பெறுவதற்கு நாட்கள் கணக்கில் வரிசையில் நின்று வந்த நிலையில், இன்று திங்கள் கிழமை காலை டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதி வழியில் சிக்கிக் கொண்டு தங்களது வீட்டுக்கு செல்ல முடியாமல் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்காக காத்திருக்கும் நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
புதிய எரிபொருள் இறக்குமதி எதிர்வரும் நாட்களில் இல்லை என்ற நிலையில், தற்போது 9000 டன் டீசல், 6000 டன் பெட்ரோல் மட்டுமே இருப்பு இருப்பதாக அந்த நாட்டின் மின்சாரம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் கொழும்பு மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளைச் சேர்ந்தவர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போது இந்த சிக்கல் தீரும் என்று இலங்கை மக்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையை கடனில் இருந்து மீட்க 3 பில்லியன் டாலர் உதவி செய்வது குறித்து அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச நிதி ஆணையத்தின் அதிகாரிகள் விரைவில் கொழும்பு வர இருப்பதாக கூறப்படுகிறது.