இலங்கையின் 19-வது அரசியலமைப்பு சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிபர் சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய பிரதமராக மகிந்தர ராஜபக்சேவுக்கு பதவியேற்றுக் கொண்டார். ஆனால் மகிந்த ராஜபக்சேவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கையின் 19-வது அரசியலமைப்பு சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிபர் சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார்.
முன்னதாக இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பொருளாதார கொள்கைகளில், அதிபர் சிறிசேனாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், சிறிசேனா மீதான கொலை சதி விவகாரத்தை, ரணில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக சிறிசேனா கடந்த மாதம் 26-ம் தேதி நியமித்தார். ஆனால் சபாநாயகர் கரு ஜயசூர்ய, ரணில் பிரதமராக தொடர்வார் என அறிவித்தார். இதேபோல் தமிழ் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு என அறிவித்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வந்தது.
இதனால் நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. ஒருவழியாக எதிர்ப்புக்குப் பணிந்த சிறிசேனா 14-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் எனக் கூறிய ரணில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சமரசம் செய்யும் சிறிசேனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. வேறு வழியின்றி இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக உத்தரவிட்டார். உடனே பொதுத்தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் அதிபர் சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் ஜெயம்பதி விக்ரமரத்னே கூறுகையில் இலங்கையில் மாற்றியமைக்கப்பட்ட 19வது அரசியல்சாசனப்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது. இதை எதிர்த்து ரணில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால், அதிபர் உத்தரவு ரத்தாகிவிடும் என்று கூறியுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.