இலங்கை அதிபர் சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககே இடையே ஏற்பட்ட மோதலால் முடக்கி வைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். வரும் ஜனவரி 5 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26-ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரணில் விக்ரமசிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.
இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்தது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்திருந்தார்.
ஆனாலும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16-ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். பின்னர் நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.
இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இலங்கையில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வந்த சூழலில் பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபின் ஜனவரி 1வ ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் சிறிசேனா அறிவித்துள்ளார்.